வருமான வரித்துறையை, மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. பேட்டி

வருமான வரித்துறையை, மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என்று முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. கூறினார். இது தொடர்பாக நெல்லையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தாலுகா அலுவலகம் கடையநல்லூரில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை

Update: 2017-06-30 20:00 GMT

நெல்லை,

வருமான வரித்துறையை, மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என்று முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. கூறினார்.

இது தொடர்பாக நெல்லையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தாலுகா அலுவலகம்

கடையநல்லூரில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை நகர எல்லைக்குள் அமைக்க வேண்டும். கடையநல்லூர் தொகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். பள்ளிக்கூடம் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் பள்ளிவாசல்களில் உள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றுமாறு போலீசார் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால் ஒலி அளவை குறைக்கவே கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ரம்ஜான் தொழுகையின் போதும் போலீசார் இடையூறு செய்தனர். இது தொடர்பாக முதல்–அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

முஸ்லிம்கள் திருமணத்தை பள்ளிவாசல்களில் பதிவு செய்கின்றனர். ஆனால் இதை ஏற்காமல் பதிவுத்துறையில் பதிவு செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். பள்ளிவாசலில் நபிகள் நாயகம் காலத்தில் இருந்து முஸ்லிம் திருமணம் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. எனவே பள்ளிவாசல்களில் பதிவு செய்யப்படும் திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாட்டு இறைச்சி

மாட்டு இறைச்சி பிரச்சினையில் பிரதமரே கண்டிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பசுக்களை பாதுகாப்பதாக கூறி மனிதர்களை கொலை செய்கின்றனர். உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்கின்றனர். எனவே மாட்டு இறைச்சி தொடர்பாக நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் தமிழக சட்டசபையிலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்த பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். தமிழக அரசு, பா.ஜனதாவுக்கு அடிபணிந்து விட்டது. மாநிலத்தில் பல்வேறு உரிமைகளை விட்டுக்கொடுக்கிறது.

நீதி விசாரணை

தமிழகத்தில் சுகாதரத்துறை அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. அது தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்–அமைச்சர் உத்தரவிட வேண்டும். மத்திய அரசு வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தி வருகிறது. தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வருமான வரி சோதனை நடத்துகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாரை ஆதரிக்கிறது. தமிழகத்தில் 1 எம்.எல்.ஏ., கேரளாவில் 18 எம்.எல்.ஏ., 3 எம்.பி.க்கள் உள்ளோம். சரக்கு, சேவை வரியை ஓராண்டுக்கு பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தி சாதக, பாதகங்களை ஆராய்ந்து தேவையான திருத்தங்களை கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்