உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு நெல்லை மாவட்டத்தில் 25 லட்சத்து 4 ஆயிரத்து 891 வாக்காளர்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வெளியிட்டார்.

Update: 2017-06-30 21:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 4 ஆயிரத்து 891 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் உத்தரவின்படி, நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2017–க்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 34 ஆயிரத்து 142 பேர், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 70 ஆயிரத்து 681 பேர், இதர வாக்காளர்கள் 68 பேர் என மொத்தம் 25 லட்சத்து 4 ஆயிரத்து 891 வாக்காளர்கள் உள்ளனர்.

மாநகராட்சி–நகராட்சி

இதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை மாநகராட்சி வார்டுகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 677 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 97 ஆயிரத்து 713 பெண் வாக்காளர்கள், 35 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 89 ஆயிரத்து 425 வாக்காளர்கள் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 7 நகராட்சிகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 58 ஆயிரத்து 676 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 62 ஆயிரத்து 912 பெண் வாக்காளர்கள், 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 593 வாக்காளர்கள் உள்ளனர்.

நகர பஞ்சாயத்து–பஞ்சாயத்து யூனியன்

நெல்லை மாவட்டத்தில் 36 நகர பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு 2 லட்சத்து 32 ஆயிரத்து 319 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 39 ஆயிரத்து 679 பெண் வாக்காளர்கள், 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரத்து 3 வாக்காளர்கள் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் 19 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. அதில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 470 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 70 ஆயிரம் 377 பெண் வாக்காளர்கள், 23 இதர வாக்காளர்கள் என மொத்தம் 13 லட்சத்து 21 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2011–ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 20 லட்சத்து 20 ஆயிரத்து 278 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, 4 லட்சத்து 84 ஆயிரத்து 613 வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

பெயர் சேர்ப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதையொட்டி வருகிற 7–ந்தேதி மற்றும் 23–ந்தேதி ஆகிய 2 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அப்போது வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும், இறந்தவர்களின் பெயரை நீக்கவும், திருத்தங்கள் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படும். கல்லூரிகளில் படித்து வரும் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மாநகராட்சி தனி அதிகாரி சிவசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) வசந்தி, (வளர்ச்சி பிரிவு) முத்து இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்