வீடு ஒதுக்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக அரசு பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-30 00:00 GMT

ஆவடி,

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக அரசு பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் பிரமிளா(வயது 48). இவர், பூந்தமல்லியை அடுத்த திருமழிசை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் ‘பில்லிங்’ பிரிவில் துணை சூப்பிரண்டாக வேலை செய்து வந்தார்.

இவருக்கு, சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த சிவமணி(46) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது சிவமணியிடம் பிரமிளா, ‘‘உங்களுக்கு திருமங்கலம் அல்லது அயப்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தருகிறேன். அதற்கு ரூ.25 லட்சம் ஆகும். முதலில் கொஞ்சம் பணம் கொடுங்கள். வீடு ஒதுக்கீடு செய்த பிறகு மீதி பணத்தை கொடுங்கள்’’ என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய சிவமணி, தனக்கு அறிமுகமான அதே பகுதியை சேர்ந்த சாந்தி, செல்வி, பரிமளா, தேவி ஆகியோரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சிவமணி உள்பட 5 பேரும் சேர்ந்து மொத்தம் ரூ.20 லட்சம் பணத்தை கடந்த 2015–ம் ஆண்டு பிரமிளாவிடம் கொடுத்தனர்.

ஆனால் அதன் பிறகு சொன்னபடி பிரமிளா, வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் சிவமணி உள்பட 5 பேரும் பிரமிளாவிடம் பணத்தை திரும்ப தரும்படி கேட்டனர். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் தொடர்ந்து அவர் காலம் கடத்தி வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவமணி, இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறி சிவமணி உள்பட 5 பேரிடம் பிரமிளா ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து அரசு பெண் அதிகாரி பிரமிளாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்