திருவண்ணாமலை பவளக்குன்று மலையில் நித்தியானந்தா சீடர்கள் பூஜை
திருவண்ணாமலை பவளக்குன்று மலையில் பூஜையில் ஈடுபட்ட நித்தியானந்தா சீடர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பவளக்குன்று மலையில் பூஜையில் ஈடுபட்ட நித்தியானந்தா சீடர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே பழமை வாய்ந்த பவளக்குன்று மலை உள்ளது. மலையில் அடிவாரத்தில் பொதுமக்கள் வீடுகட்டி வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தா சீடர்கள் மலையில் பல ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். மேலும் அங்கு தென்னங்கீற்றால் ஆன ஆசிரமம் அமைத்து, அதில் 3 சிலைகள் வைத்து பூஜை செய்தனர்.இதையடுத்து பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல நித்தியானந்தா சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் அங்கு முள்வேலி அமைப்பதற்கான கம்பிகள் மற்றும் கற்கள் மலைக்கு கொண்டு வரப்பட்டன. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மலையில் முள்வேலி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நித்தியானந்தா சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர். அதன் பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பவளக்குன்று மலைக்கு நேரில் சென்று நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்து கட்டிருந்த ஆசிரமத்தை அகற்றினர்.
இந்த நிலையில் நேற்று புரட்சித் தமிழர் கட்சி, அம்பேத்கர் தேசிய கட்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் உரிமை கூட்டமைப்பு, நித்தியானந்தா சீடர்கள் மற்றும் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், பவளகுன்றில் உள்ள சதாசிவர் பாறையை வழிபாடு செய்து வரும் நித்தியானந்தா பீடத்தை சேர்ந்தவர்களை போலீசார் விரட்டியதோடு இல்லாமல், அந்த இடத்தில் உள்ள பாறையை உடைத்துள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நித்தியானந்தா பீட சீடர்கள் தொடர்ந்து ஆன்மிக வழிபாடுகள் நடத்திட வழிவகையும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் பவளக்குன்று மலைக்கு சென்று சதாசிவர் பாறையில் பூஜை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பூஜையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட நித்தியானந்தா சீடர்களையும், பொதுமக்களையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.அப்போது நித்தியானந்தா சீடர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பவளக்குன்று மலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு அழைத்து வந்து அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.