காஞ்சீபுரம், திருவள்ளூரில் போதை பொருள் எதிர்ப்பு நாள் பேரணி
காஞ்சீபுரம், திருவள்ளூரில் போதை பொருள் எதிர்ப்பு நாள் பேரணி நடந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம், திருவள்ளூரில் போதை பொருள் எதிர்ப்பு நாள் பேரணி நடந்தது.
காஞ்சீபுரம் போதைபொருள் நுண்ணறிவு போலீஸ் சார்பில் காஞ்சீபுரம் தேரடியில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு நாளையொட்டி பேரணி நடந்தது. இந்த பேரணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, இன்ஸ்பெக்டர் கார்த்திகா மற்றும் செஞ்சிலுவை சங்கம், ஊர்காவல்படை, மருந்துகடை விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இந்த பேரணி காந்திரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் ரோடு வழியாக பஸ்நிலையத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் அடங்கிய பேனர்களை கையில் ஏந்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து தானும் உடன் சென்றார்.அப்போது அவர் கூறியதாவது:–
திருவள்ளூர் மாவட்டத்தில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற்றது. போதை பொருட்கள் பயன்பாட்டால் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் மூளை பாதிப்புகள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கோளாறுகள் ஏற்படும். எனவே போதைப்பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருத்தல் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேரணியில் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்த பேரணியில் கலால் உதவி ஆணையர் முத்துசாமி, மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.