மாந்தோப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
பேரணாம்பட்டு வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஆந்திர வனப்பகுதியில் இருந்து 30 காட்டு யானைகள் 4 பிரிவுகளாக வந்து கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஆந்திர வனப்பகுதியில் இருந்து 30 காட்டு யானைகள் 4 பிரிவுகளாக வந்து கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்தலப்பல்லி அணைத்திட்ட பகுதிக்குள் ஒரு குட்டி யானையுடன் 5 யானைகள் வந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
தண்டபாணி என்பவரின் மாந்தோப்புக்குள் புகுந்து 3 டன் எடையுள்ள மாம்பழங்களை சாப்பிட்டு, மரக்கிளைகளையும் முறித்து போட்டது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களையும், மாந்தோப்பிலுள்ள ஒலை கொட்டகையையும் சேதப்படுத்தியது. பின்னர் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்புக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த பழங்களை சாப்பிட்டு, கிளைகளை சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகளை அருகில் உள்ள காட்டுக்குள் விரட்டினர்.