60 அரசு பள்ளிகளில் நடமாடும் நூலக சேவை

வேலூர் மாவட்டத்தில் 60 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் நூலக சேவை தொடங்கப்பட இருப்பதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-29 23:57 GMT

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 60 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் நூலக சேவை தொடங்கப்பட இருப்பதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ– மாணவிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நூலக சேவை வாகன தொடக்க விழா நடந்தது. விழாவில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு நூலக சேவையை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவில் செயல்படும் நூலகங்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைக்கும் திட்டமான வகுப்பறை நூலக திட்டம் நீண்டகாலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நூலக பணியாளர்கள் மூலம் அருகில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ– மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதத்திற்கு 2 முறை 50 நூல்கள் வீதம் 100 நூல்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கி, திரும்ப பெறப்பட்டு மாதாமாதம் நூல்கள் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வகுப்பறை நூலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடமாடும் நூலகம் செயல்படாத ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ– மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடமாடும் நூலகத்தினை பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்தும் படியான திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டம் மாவட்டத்தின் தலைநகரான வேலூரை ஒட்டி உள்ள 60 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இந்தச் சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு, பொது அறிவை வளர்க்கக்கூடிய நூல்களை படித்து பயன்பெற ஊக்குவிக்க வேண்டும்.

இந்த நடமாடும் நூலகத்தில் ஒரு 3–ம் நிலை நூலகர் மற்றும் ஓட்டுனர் பணியாற்றி வருகின்றனர். நடமாடும் நூலகத்தில் சிறுவர்களுக்கான நீதிக்கதைகள், சான்றோர் வரலாறு, முன்னேற்ற கட்டுரைகள், இலக்கியம், ஆன்மிகம், பொது அறிவு உள்பட 4 ஆயிரத்து 600 நூல்கள் உள்ளன. இவற்றை மாணவ– மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்