நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி இடையே பணிகள் நிறைவடைந்தது பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவை
பெங்களூருவில் நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று(சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து பெங்களூருவில் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவடைந்து முழு அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.
நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி
பெங்களூருவில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.14 ஆயிரத்து 405 கோடி செலவில் நகரின் 4 திசைகளையும் இணைக்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்க பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையும், வடக்கு-தெற்கு பகுதிகளை இணைக்க நாகச்சந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 18.10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பையப்பனஹள்ளி-நாயண்டஹள்ளி இடையே பணிகள் முடிந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு ஊதா நிற பாதை (பர்பல் லைன்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் தினமும் சுமார் 1½ லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில் 24.20 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்கு பசுமை பாதை (கிரீன் லைன்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு விதான சவுதா விருந்தினர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு, மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதில் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி சித்தராமையா, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதன் மூலம் 42.30 கிலோ மீட்டர் முழுமையான முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை திட்டம் நிறைவடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் தினமும் சுமார் 5 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாதையில் நாகச்சந்திரா முதல் சம்பிகே ரோடு வரை ஏற்கனவே பணிகள் முடிந்து ஓராண்டாக மெட்ரோ ரெயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது புதிதாக சம்பிகே ரோட்டில் இருந்து எலச்சனஹள்ளி வரை ரெயில் சேவை தொடங்குகிறது. முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மெஜஸ்டிக்கில் இருந்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ஆய்வு செய்தார். செய்யப்பட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி பாதையில் மொத்தம் 3.5 கிலோ மீட்டர் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
13 நுழைவு வாயில்கள்
மெஜஸ்டிக் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் 7 கால்பந்து விளையாட்டு மைதானங்கள் அளவுக்கு பெரியது. அங்கு 13 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. 18 அவசர வழிகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் வரை உள்ளே இருக்க முடியும். ஒட்டுமொத்தமாக 42.30 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரெயில் பாதையில் 33.48 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையாகவும், 8.82 கிலோ மீட்டர் சுரங்க பாதையாவும் அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளியை 33 நிமிடங்களிலும், நாகச்சந்திராவில் இருந்து எலச்சனஹள்ளியை 44 நிமிடங்களிலும் சென்றடைய முடியும். தினம் தினம் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் நகர மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும் என்று சொல்லலாம். முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மொத்தம் 40 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 33 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும், 7 ரெயில் நிலையங்கள் சுரங்க பாதையிலும் நிறுவப்பட்டுள்ளன.
போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமக்களுக்கு முழுஅளவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. இதன் மூலம் பெங்களூருவில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் கட்டணத்தில் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெஜஸ்டிக் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் - ஒரு பார்வை
மெஜஸ்டிக் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் 49 ஆயிரத்து 575 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 7 கால்பந்து மைதானம் போன்ற பரப்பளவு கொண்டது. இது இடைமாற்று (‘இன்டர்சேஞ்ச்‘) ரெயில் நிலையம் ஆகும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 60 அடி ஆழத்தில் வடக்கு-தெற்கு ரெயில் பாதை நிறுவப்பட்டுள்ளது. 4 திசைகளில் இருந்து வரும் ரெயில்கள் இந்த மெஜஸ்டிக் சுரங்க ரெயில் நிலையம் வழியாக தான் செல்ல வேண்டும். அந்த ரெயில் நிலையம் பெரியதாக உள்ளதால், உள்ளே வரும் பயணிகள் குழப்பம் அடைவது உறுதி. ஆனால் பயணிகளுக்கு வழிகாட்ட அனைத்து இடங்களிலும் வழிகாட்டும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ரெயில் நிலையம் 4 நிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் நிலை கான்கோர்ஸ். இது திறந்தவெளி பகுதி ஆகும். இங்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து நிற்க முடியும். 2-ம் நிலை மிட்லேன்டிங் பகுதியில் டிக்கெட் வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3-வது நிலையில் பூமியின் மேற்பரப்பில் இருந்து 12.54 மீட்டர் ஆழத்தில் கிழக்கு-மேற்கு ரெயில் பாதை கடந்து செல்கிறது. அதற்கு கீழ் அதாவது 4-வது நிலையில் 18.54 மீட்டர் ஆழத்தில் வடக்கு-தெற்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பிளாட்பாரம்-1-ல் வரும் ரெயில்கள் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா நிலையம், பி.ஆர்.அம்பேத்கர்(விதான சவுதா), கப்பன் பார்க், எம்.ஜி.ரோடு, டிரினிட்டி சர்க்கிள், அல்சூர், இந்திராநகர், சுவாமி விவேகானந்தா ரோடு, பையப்பனஹள்ளிக்கு செல்லும்.
பிளாட்பாரம்-2-ல் வரும் ரெயில் மாகடி ரோடு, ஒசஹள்ளி, விஜயநகர், அத்திகுப்பே, தீபாஞ்சலிநகர், நாயண்டஹள்ளி பகுதிக்கு செல்லும்.
பிளாட்பாரம்-3-ல் வரும் ரெயில்கள் சம்பிகே ரோடு, ஸ்ரீராமபுரம், குவெம்பு ரோடு, ராஜாஜிநகர், மகாலட்சுமி, மைசூரு சாண்டல் பேக்டரி, யஷ்வந்தபுரம், கோரகுன்டேபாளையா, பீனியா, ஜாலஹள்ளி, தாசரஹள்ளி, நாகச்சந்திரா பகுதிக்கு செல்லும்.
பிளாட்பாரம்-4-ல் வரும் ரெயில்கள் சிக்பேட்டை, கே.ஆர். மார்க்கெட், நேஷனல் கல்லூரி, லால்பாக், சவுத்என்ட் சர்க்கிள், ஜெயநகர், ஆர்.வி.ரோடு, பனசங்கரி, ஜே.பி.நகர், எலச்சன ஹள்ளிக்கு செல்லும்.