விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து நாம் அதிகம் பேசுகிறோம் நமது நாட்டில் கடன் கொள்கை இருக்கிறதா?

விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து நாம் அதிகம் பேசுகிறோம், ஆனால் நமது நாட்டில் கடன் கொள்கை இருக்கிறதா? என்று சட்டசபையில் மந்திரி ரமேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

Update: 2017-06-16 23:34 GMT

பெங்களூரு,

விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து நாம் அதிகம் பேசுகிறோம், ஆனால் நமது நாட்டில் கடன் கொள்கை இருக்கிறதா? என்று சட்டசபையில் மந்திரி ரமேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

கடன் கொள்கை இருக்கிறதா?

கர்நாடக சட்டசபையில் நேற்று துறைகளின் மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் குமாரசாமி பேசிக் கொண்டிருந்தார். அப்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார் குறுக்கிட்டு பேசியதாவது:–

விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் நமது நாட்டில் கடன் கொள்கை என்று ஏதாவது இருக்கிறதா?. கர்நாடகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 20 சதவீத விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். தேசிய வங்கிகளில் 80 சதவீத விவசாயிகள் கடன் வாங்கியுள்ளனர். தேசிய வங்கிகளில் உள்ள விவசாயக்கடனை தள்ளுபடி செய்தால், நாடு மூழ்கிவிடும் என்று மத்திய அரசு நினைத்தால், நமக்கு உள்ள மாநில நிதி நிலை கட்டுப்பாட்டில் நாம் கடனை தள்ளுபடி செய்தால் மாநில அரசு மூழ்கிவிடும் என்று கருதுவதில் என்ன தவறு உள்ளது?.

ஜப்தி செய்கிறார்கள்

இந்த நாட்டை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியே சென்றனர். அவர்கள் விட்டு சென்ற இடத்தில் பெரிய முதலாளிகள் வந்து உட்கார்ந்துள்ளனர். இந்த நாட்டின் பிரதமராக யார் வர வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். செய்தி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளை நடத்துகிறார்கள். யார் சரி, யார் தவறு என்று தீர்ப்பு வழங்குகிறார்கள். இந்த சூழ்நிலையில் பெரிய அளவில் கடன் பெற்றாலும் அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

மத்திய அரசு அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஆனால் விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால், அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக யோசிப்போம். கடன் தள்ளுபடி என்றால், எந்த விவசாயிகளும் கடனை திரும்ப செலுத்த தேவை இல்லை என்று அழைப்பு விடுக்கலாம்.

தீர்மானிக்க வேண்டும்

கூட்டுறவு வங்கிகள் மட்டும் விவசாய கடனை தள்ளுபடி செய்தால், அடுத்த ஆண்டில் விவசாயிகளுக்கு யார் கடன் கொடுப்பார்கள். தேசிய வங்கிகளில் உள்ள கடனை தள்ளுபடி செய்வது யார்?. அதனால் நாம் அனைவரும் கலந்து ஆலோசனை நடத்தி, எந்த அளவுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

விவசாயிகள் எந்த காலத்தில் எந்த பயிர் விளைச்சல் செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவான பயிர் சாகுபடி கொள்கை நம்மிடம் இல்லை. இதுபோன்ற வசதிகள் எல்லாம் நம்மிடம் இல்லாதபோது, விவசாய கடனை தள்ளுபடி செய்வதால் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை.

இவ்வாறு ரமேஷ்குமார் பேசினார்.

மேலும் செய்திகள்