சேலம் சொர்ணபுரியில் டாஸ்மாக் கடை முன் மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
சேலம் சொர்ணபுரியில் டாஸ்மாக் கடை முன் மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
சேலம்,
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. அவற்றுக்கு பதிலாக, மாற்று இடத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கும் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால், அரசு தரப்பில் மாற்று இடத்திலும் மதுக்கடைகள் திறக்க முடியாமல் தவித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் 137 மதுக்கடைகள் மூடப்பட்டன. சேலம் சொர்ணபுரியில் மாநில நெடுஞ்சாலை அருகிலேயே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதை மூட கோரி மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஏற்கனவே போராட்டம் நடத்தியபோது, 2 மாத கால அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், 2 மாதத்திற்கு மேலாகியும் கடை மூடப்படவில்லை.
காத்திருப்பு போராட்டம்இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் சொர்ணபுரியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நேற்று பகல் 12 மணிக்கு, டாஸ்மாக் கடை முன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். முன்னதாக ஊர்வலமாக வந்தனர்.
மாதர் சங்க மாநகர தலைவி காவேரி தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க மாநகர தலைவர் சதீஷ்குமார், மாதர் சங்க மாநகர செயலாளர் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை மாதர் சங்க மாநில செயலாளர் ஜோதிலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், மாநகர செயலாளர் வெங்கடேஷ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராஜாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடமாட முடியவில்லைபோராட்டம் நடப்பதை அறிந்து அங்கு முன்கூட்டியே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்த மாதர் சங்க மாநில செயலாளர் ஜோதிலட்சுமி கூறுகையில், ‘‘மக்கள் குடியிருக்கும் பகுதியில் மதுக்கடை இயங்கி வருகிறது. அரசு சொல்வதை மக்கள் மட்டும் செயல்படுத்த வேண்டும். அதே வேளையில் சுப்ரீம் கோர்ட்டு சொன்னால் மட்டும் அரசு செயல்படுத்தக்கூடாதா? மக்களுக்கு ஒரு நீதி, அரசுக்கு ஒரு நீதியா?. இங்கு குடிமகன்கள் குடித்து விட்டு ஆபாச வார்த்தைகளால் பேசுவதும், அரைநிர்வாணமாக திரிவதுமாக உள்ளனர். இதனால், இங்கு மக்கள் நடமாடமுடியவில்லை. எனவே, உடனடியாக மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்றார்.
போராட்டம் நடத்தியவர்களிடம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தார் ரவிக்குமார், சேலம் மேற்கு வருவாய் ஆய்வாளர் ஹரிகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு தரப்பில் மேலும் ஒருமாத கால அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.