அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
பெண்ணாடம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
பெண்ணாடம்
பெண்ணாடம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடிப்படை வசதிபெண்ணாடம் அருகே உள்ளது சவுந்திரசோழபுரம். இங்குள்ள அருந்ததியர் காலனியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும் தெருமின் விளக்கு வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தெருமின் விளக்குகள் எரியவில்லை. மேலும் இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யவேண்டும், எரியாத தெருமின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனே அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி ஊராட்சி செயலாளரிடம் புகார் கூறினர். ஆனால் இதுவரை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நேற்று காலை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.