சாலையை சீரமைக்க அதிகாரிகள் உறுதி: கிராம மக்களின் போராட்டம் வாபஸ்

கொலக்கம்பை அருகே சாலையை சீரமைக்க அதிகாரிகள் உறுதி அளித்ததால்

Update: 2017-06-16 22:15 GMT

கொலக்கம்பை,

கொலக்கம்பை அருகே உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட ட்ரூக், செங்கல்புதூர், பக்காசூரன் மலை, டேன் டீ உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500–க்கு மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக நான்சச் பிரிவில் இருந்து பக்காசூரன் மலை கிராமம் இடையே உள்ள 4 கி.மீ சாலையை சீரமைத்து தரக்கோரி, மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3–வது நாள் போராட்டம்

நேற்று 3–வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வேலைக்கு செல்லாமல் தொழிலாளர்கள் மட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் அந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பத்ரி, ஆல்தொரை, விடுதலை சிறுத்தை கட்சியின் சட்ட மன்ற தொகுதி செயலாளர் சுதாகர், உலிக்கல் பேரூராட்சி முன்னாள் தலைவர் தமிழ்செல்வன் உள்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு ஆதரித்து பேசினார்கள்.

இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கலாநிதி குன்னூர் ஆர்.டி.ஒ. கீதா பிரியா, தாசில்தார் சிவக்குமார், கொலக்கம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரன் உள்ளிட்டோர் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்தை நடத்தினர்.

போராட்டம் வாபஸ்

பேச்சுவார்த்தையில், குறிப்பிட்ட 4 கி.மீ தூர சாலை முதல் கட்டமாக ஜல்லி மற்றும் மண் கொட்டி சீரமைக்கப்படுவதாகவும், இதற்கான பணி இன்னும் 15 நாட்களுக்குள் தொடங்கப்படும் என்றும், அதன் பிறகு நிரந்தரமாக தார் சாலை அமைக்க அரசிடம் பரிந்துரை செய்து உரிய நிதி பெற்ற பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்கு எழுத்து பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்று போராட்ட குழுவினர் கேட்டு கொண்டனர். அவர்களும் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கிராம மக்கள் வாபஸ் பெற்றனர்.

மேலும் செய்திகள்