அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரின் மகனை கண்டுபிடிக்கக்கோரி வழக்கு புகார் குறித்த விசாரணையை, போலீஸ் கமிஷனர் கண்காணிக்க உத்தரவு
அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரின் மகனை கண்டுபிடிக்கக்கோரி வழக்கு புகார் குறித்த விசாரணையை, போலீஸ் கமிஷனர் கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவு;
மதுரை,
மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ராஜபாண்டி. அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர். இவரது மனைவி முனியம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எனது மூத்த மகன் முனியசாமி, ஒரு வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பரமக்குடி கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு காமராஜபுரம் சாலையில் நின்று கொண்டிருந்த சிலர் முனியசாமியை கொன்றுவிட்டதாகவும், அவரது உடலை அள்ளிக்கொள்ளுங்கள் என்றும் உரக்க கத்தினர். அதன்பிறகு எனது மகன் முனியசாமியை காணவில்லை. இதனையடுத்து அவரை கண்டுபிடிக்க வேண்டும் என அண்ணாநகர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் புகாரை விசாரிக்க மறுக்கின்றனர். எனவே எனது மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார்.
இதனையடுத்து மனுதாரர் புகார் குறித்த விசாரணையை மாநகர போலீஸ் கமிஷனர் கண்காணிக்க வேண்டும். மனுதாரர் மகனை கண்டுபிடித்தால் கீழ்கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.