பிறப்பு–இறப்பு பதிவு புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

பிறப்பு–இறப்பு பதிவு தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தினை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2017-06-16 22:15 GMT

ராமநாதபுரம்

பிறப்பு–இறப்பு பதிவு தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தினை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோர்ட்டு புறக்கணிப்பு

தமிழ்நாடு பிறப்பு–இறப்பு பதிவு சட்டத்தின்கீழ் ஏற்கனவே ஒரு ஆண்டு காலத்திற்கு பதிவு செய்யப்படாமல் இருந்தால் அதனை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, முறையான சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு பிறப்பு–இறப்பு பதிவு செய்ய நீதிபதியால் உரிய உத்தரவு வழங்கப்படும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2–ந்தேதி அரசின் சார்பில் இந்த நடைமுறையை மாற்றி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. இதன்படி அந்தந்த பகுதி வருவாய் கோட்டாட்சியர் மூலமே பிறப்பு–இறப்பு பதிவு சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசாணை பிறபிக்கப்பட்டுஉள்ளது. ஆனால், இதற்கான முறையான விதிகள் வகுக்கப்படவில்லை.

இந்த புதிய உத்தரவின் காரணமாக நீதித்துறை நடுவர் நீதிபதிகளுக்கு இருந்த அதிகாரம் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு மாற்றப்பட்டுஉள்ளது. மேலும், இந்த உத்தரவின் காரணமாக பிறப்பு–இறப்பு சான்றிதழ் தொடர்பாக தொழிலை நம்பி உள்ள இளம் வக்கீல்கள் மற்றும் அதனை சார்ந்த நபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். ஏற்கனவே, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளில் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில் இந்த சான்றிதழ் வழங்கும் பணியும் கூடுதல் சுமையாக உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, மக்களையும், வக்கீல்களையும் பாதிக்கும் இந்த புதிய அரசாணையை ரத்து செய்து விட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலமே சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், நீதிமன்ற கட்டணமும் ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. இதனை உரிமையியல் நீதிமன்ற கட்டணம் ரூ.1000 என்றும், சார்பு மற்றும் மாவட்ட நீதிமன்றம் கட்டணம் ரூ.3,000 எனவும் திருத்தம் செய்ய வேண்டும்.

கோரிக்கை மனு

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கோர்ட்டுகளில் இருந்தும் வக்கீல்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்து சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதன்படி ராமநாதபுரத்தில் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் வக்கீல் அழகுபாலகிருஷ்ணன், செயலாளர் சலீம், துணை தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட வக்கீல்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக சென்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மூலமாக சட்டத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக மாநில குழு முடிவின் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுஉள்ளதாக வக்கீல் சங்க தலைவர் அழகுபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்