வங்கி மேலாளர் போல் பேசி ஊராட்சி முன்னாள் தலைவர் கணக்கில் இருந்து ரூ.29 ஆயிரம் எடுத்து மோசடி

வங்கி மேலாளர் போல் பேசி ஊராட்சி முன்னாள் தலைவர் கணக்கில் இருந்து ரூ.29 ஆயிரம் எடுத்து மோசடி போலீஸ் விசாரணை

Update: 2017-06-16 21:45 GMT

தேவதானப்பட்டி,

வங்கி மேலாளர் போல் பேசி ஊராட்சி முன்னாள் தலைவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.29 ஆயிரம் எடுத்து மோசடி செய்தவர் குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் அழைப்பு

தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 50). ஊராட்சி முன்னாள் தலைவரான இவருக்கு சம்பவத்தன்று ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மேலாளர் என்று தெரிவித்தார். மேலும் பிச்சைமணியின் ஏ.டி.எம். கார்டின் பயன்பாட்டு காலம் முடிந்துவிட்டதாகவும், தான் கேட்கும் விவரங்களை தெரிவித்தால் உடனடியாக ஏ.டி.எம். கார்டின் பயன்பாட்டு காலத்தை நீட்டிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை உண்மை என நம்பிய பிச்சைமணியும் அவர் கேட்டபடி ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவருடைய ஏ.டி.எம். கார்டின் பயன்பாட்டு காலம் நீட்டிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில நிமிடங்களில் அதற்கான குறுந்தகவல் உங்களுடைய செல்போன் எண்ணுக்கு வரும் என கூறிவிட்டு அந்த நபர் இணைப்பை துண்டித்துள்ளார்.

போலீஸ் விசாரணை

ஆனால் சிறிது நேரத்தில் பிச்சைமணியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.29 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வங்கிக்கு சென்று இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள், ஏ.டி.எம். கார்டு குறித்து நாங்கள் யாருக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்பதில்லை என தெரிவித்தனர். அப்போது தான் பிச்சைமணியை செல்போனில் அழைத்தவர் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜெயமங்கலம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிச்சைமணியை தொடர்புகொண்டவரின் செல்போன் எண்ணையும் சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்