டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2017-06-16 22:00 GMT

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் பிரிவு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கடை முற்றுகை, சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து புதுக்குய்யனூர் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் புதுக்குய்யனூர் பிரிவு பகுதிக்கு அருகில் உள்ள கஸ்தூரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இதற்காக அந்த பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து கடை கட்டும் நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அந்த பகுதியில் பரவியது. இதைத்தொடர்ந்து வடவள்ளி, கஸ்தூரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு புதிதாக டாஸ்மாக் கடை கட்டப்பட உள்ள இடத்துக்கு நேற்று மாலை 5 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் 6 மணி வரை நீடித்தது. அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்