ஈரோட்டில் மாட்டு இறைச்சியை சாமிக்கு படையல் போடும் போராட்டம்

ஈரோட்டில் மாட்டு இறைச்சியை சாமிக்கு படையல் போடும் போராட்டம் ஆதித்தமிழர் பேரவையினர் 16 பேர் கைது

Update: 2017-06-16 22:30 GMT

ஈரோடு,

ஈரோட்டில், மாட்டு இறைச்சியை சாமிக்கு படையல் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

மக்கள் பண்பாட்டு விழா

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் அந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் கீழ் உள்ள மதுரைவீரன் மக்கள் பண்பாட்டு பேரவை சார்பில் மாட்டை வெட்டி மதுரைவீரன் சாமிக்கு படையல் போடும் பேராட்டம் நேற்று ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடந்தது.

வாக்குவாதம்

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதித்தமிழர் பேரவையினர், ‘சாப்பிடுவோம், சாப்பிடுவோம் மாட்டு இறைச்சியை சாப்பிடுவோம்‘ என்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் மாட்டு இறைச்சியை மதுரைவீரனுக்கு படையல் போடுவதற்காக ஈ.வி.என். ரோட்டுக்கு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், அருண் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் ஆதித்தமிழர் பேரவையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

16 பேர் கைது

அதைத்தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவையினர் மாட்டு இறைச்சியை வாயில் கவ்விக்கொண்டு போராட்டம் நடத்தினர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். ஒரு பெண் உள்பட மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்