கொத்தவால்சாவடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.24 லட்சம் கொள்ளை

கொத்தவால்சாவடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.24 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2017-06-16 22:15 GMT

ராயபுரம்,

சென்னை கொத்தவால்சாவடி ஸ்பார்டன் முத்தையா தெருவை சேர்ந்தவர் கிஷோர் (வயது 30). இவர் பாரிமுனை பகுதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோரின் குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் சென்றுவிட்டனர்.

எனவே அவர் மட்டும் தங்கியிருந்து கடையை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் அவர் வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். இரவில் வீட்டிற்கு சென்றபோது வெளிக்கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

ரூ.24 லட்சம் கொள்ளை

இதனால் அதிர்ச்சியடைந்த கிஷோர், உள்ளே சென்று பார்த்தபோது அங்கே அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.24 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.

எனவே இது குறித்து கொத்தவால்சாவடி போலீஸ் நிலையத்தில் கிஷோர் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

போலீசார், கிஷோரின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அப்போது கொள்ளையர்களின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்