சிறைகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களின் புழக்கத்தை தடுக்க தினமும் தீவிர சோதனை
சிறைகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களின் புழக்கத்தை தடுக்க தினமும் தீவிர சோதனை புதிதாக பொறுப்பேற்ற சிறைத்துறை டி.ஐ.ஜி. தகவல்
வேலூர்,
சிறைகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களின் புழக்கத்தை தடுக்க தினமும் தீவிர சோதனை நடத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன் கூறினார்.
நளினி உண்ணாவிரதம் இருக்கவில்லைவேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த முகமதுஅனீபா, சென்னை கடலோர காவல் படை டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். சென்னை ரெயில்வே டி.ஐ.ஜி.யாக இருந்த பாஸ்கரன், வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய டி.ஐ.ஜி. பாஸ்கரன், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை, வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனி உள்பட சிறைத்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, சிறையில் நளினி உண்ணாவிரதம் இருப்பது குறித்து புதிய டி.ஐ.ஜி. பாஸ்கரன், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். நளினி உண்ணாவிரதம் இருக்கவில்லை. காலையில் கூட இளநீர், பிஸ்கெட் சாப்பிட்டதாக பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி விளக்கம் அளித்தார்.
கைதிகளுக்கு ஆதார் அட்டைபின்னர் டி.ஐ.ஜி. பாஸ்கரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சிறைகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களின் புழக்கத்தை தடுக்க தினமும் தீவிர சோதனை நடத்தப்படும். தேவைப்பட்டால் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் கைதிகளின் அறைகளிலும் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்படும். கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. விடுபட்ட கைதிகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்கவும், வங்கி கணக்குகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கைதிகளை கொண்டு விவசாய தொழில், தோல் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தோல் பொருட்கள் காவல் துறை, தீயணைப்புத்துறைக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இனி, வருங்காலங்களில் கைதிகள் தயாரித்த தோல் பொருட்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறை வளாகத்தில் இருந்த சிறப்பு அங்காடி நட்டத்தில் இயங்கியதால் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.