மாட்டிறைச்சி தடையை கண்டித்து நெல்லையில், மாட்டுத்தலையுடன் போராட்டம் நடத்தியவர்கள் கைது

மாட்டிறைச்சி தடையை கண்டித்து நெல்லையில், மாட்டுத்தலையுடன் வந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-16 20:30 GMT
நெல்லை,

மாட்டிறைச்சி தடையை கண்டித்து நெல்லையில், மாட்டுத்தலையுடன் வந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

மாட்டிறைச்சி போராட்டம்

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று காலை ஆதித்தமிழர் பேரவையினர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் திரண்டனர். அங்கு ‘மாட்டை அறுத்து மதுரை வீரனுக்கு படையல் போடும் மக்கள் பண்பாட்டு திருவிழா’ என்ற பெயரில் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

25 பேர் கைது

மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜானகியம்மாள் மாட்டிறைச்சி தடையை கண்டித்து பேசினார். அப்போது, ஒருவர் இறைச்சிகடையில் அறுத்து வைக்கப்பட்டிருந்த மாட்டு தலையுடன் அங்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இதைக்கண்ட போலீசார், அவரிடம் இருந்து மாட்டுத்தலையை பறிமுதல் செய்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தில் கலைக்கண்ணன், ஜானகியம்மாள், மாநகர தலைவர் தென்திருவளவன், செயலாளர் குட்டிபாய், அமைப்பு செயலாளர் செந்தில்பாண்டி, மதன், விஜயா உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அனைவவரயும் கொக்கிரகுளத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்தனர். பிற்பகலில் அனைவரையும் விடுதலை செய்தனர். இந்த போராட்டத்தால் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்