தூத்துக்குடி கடல் பகுதியில் அதிக மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி மீண்டும் களைகட்டியது மீன்பிடி துறைமுகம்

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2017-06-16 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் குவிந்ததால் மீண்டும் மீன்பிடி துறைமுகம் களைகட்டியுள்ளது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழக கடல் பகுதியில் ஏப்ரல், மே மாதங்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த ஆண்டு வரை 45 நாட்கள் மட்டுமே விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு முதல் தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல்மாதம் 15–ந் தேதி முதல் ஜூன் மாதம் 14–ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கடலுக்கு சென்றனர்


இந்த தடைக்காலம் முடிந்து நேற்று முன்தினம் அதிகாலையில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 323 விசைப்படகுகளில் மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு சென்றனர். இதில் தூத்துக்குடியில் இருந்து 210 விசைப்படகுகளிலும், தருவைகுளத்தில் இருந்து 80 விசைப்படகுகளிலும், வேம்பாரில் இருந்து 33 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர்.

மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பினர். 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைத்து உள்ளன. இதில் காரல், குருவளை, ஊளி, பாறை, களஞம் போன்ற மீன்கள் அதிக அளவில் பிடிபட்டன. சுமார் 20 கிலோ எடை கொண்ட குருவளை மீன்கள், சுமார் 30 கிலோ எடை கொண்ட பாறை மீன்களும் பிடிபட்டு இருந்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வியாபாரிகள் குவிந்தனர்

நேற்று இரவு மீன்களை வாங்குவதற்காக கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் குவிந்து காணப்பட்டனர். இதனால் துறைமுகத்தில் மீனவர்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. கடந்த 61 நாட்களாக களையிழந்து காணப்பட்ட மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் மீண்டும் களைகட்ட தொடங்கி இருக்கிறது.

இது குறித்து மீனவர் ஒருவர் கூறும் போது, ‘தூத்துக்குடியில் இருந்து 61 நாட்களுக்கு பிறகு மீன்பிடித்து வந்தோம். அதிக அளவில் மீன்கள் பிடிபட்டு உள்ளன. சிறிய, பெரிய ஊளி மீன்கள் அதிகமாக கிடைத்து உள்ளன. அதே போன்று குருவளை, காரல் மீன்களும் அதிகமாக பிடிபட்டு இருக்கிறது. இதனால் முதல் நாளில் அதிக மீன்கள் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்