18 முதல் 21 வயது வரை தகுதி உள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

வேலூர் மாவட்டத்தில் 18 முதல் 21 வயது வரை தகுதி உள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-06-16 00:24 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் 18 முதல் 21 வயது வரை தகுதி உள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டம்

வாக்காளர் பட்டியலில் முதல் முறை வாக்காளர்களான 18 முதல் 21 வயது உடையவர்களிடையே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் அடுத்த மாதம் (ஜூலை) 1–ந்தேதி முதல் 31–ந் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், உதவி கலெக்டர்கள், தேர்தல் தனி தாசில்தார் விஜயகுமார் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு முகாம்கள்

கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

18 முதல் 21 வயது வரை உள்ளவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற 1–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. அரசியல் கட்சியினர் தங்களுக்கு தெரிந்தவர்களை அழைத்து வந்து அவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும். 18 முதல் 21 வயது வரை உள்ளவர்களின் பெயர்கள் மட்டும் இந்த முகாம்களில் சேர்க்கப்படும். மொத்தமாக விண்ணப்பங்களை பெற்று வரக்கூடாது.

மாநகராட்சி, நகராட்சி, உதவி கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படும். இதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவை தவிர அடுத்த மாதம் 9 மற்றும் 23–ந்தேதிகளில் 1,627 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

தகுதி உள்ள அனைவரும்

இந்தப் பணிகளை கண்காணிக்க 224 மேற்பார்வை அலுவலர்களும், ஒரு தொகுதிக்கு ஒரு துணை ஆட்சியர் நிலையிலான அலுவலரும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். கல்லூரிகளில் விழிப்புணர்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தகுதி உள்ள யாரும் விடுபடாத வகையில் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் கொடுக்க முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.


மேலும் செய்திகள்