நாராயணசாமியுடன், தனவேலு காரசார விவாதம்

புதுவை சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு காரசார விவாதத்தில் ஈடுபட்டார். புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

Update: 2017-06-16 00:16 GMT

புதுச்சேரி,

தனவேலு: பாகூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி சமுதாய நல மையமாக மாற்றி அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

முதல்–அமைச்சர் நாராயணசாமி: பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. அதை சமுதாய நல மையமாக உயர்த்திட தற்சமயம் இயலாது.

தனவேலு: கடந்த ஆண்டு நான் இதே கேள்வியை கேட்டபோது தந்த பதில் அப்படியே உள்ளது. ஆனால் காரைக்கால் திருநள்ளார் அருகே சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் சமுதாய நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எப்படி திறந்தீர்கள்? பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் இல்லை. டாக்டர்கள் முழுநேரமும் பணியில் இருப்பதில்லை. மருந்துகளும் இல்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கும் மருந்து இல்லை. ஆம்புலன்சு வசதியும் இல்லை. நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கும் மருந்து இல்லை.

வாக்குறுதி தரமுடியாது

நாராயணசாமி: துணை கேள்விகள் என்றால் ரொம்பவும் கேட்கக்கூடாது. பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 டாக்டர்கள் பணியில் உள்ளனர். அதேபோல் நர்சுகள், மற்றும் பணியாளர்கள் சுழற்சி முறையில் முழுநேரமும் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதிலும் எம்.எல்.ஏ. புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கண்காணிக்க கூறுகிறேன். பாகூரை பொறுத்தவரை மாதத்துக்கு 10 ஆயிரம் நோயாளிகள் அங்கு வருகின்றனர். குறைந்தது 20 ஆயிரம் பேராவது வந்ததால்தான் சமுதாயநல மையமாக மாற்ற முடியும். நாங்கள் ஒரு தொகுதியை மட்டுமே கவனிக்க முடியாது. 30 தொகுதி மக்களையும் நாம் கவனிக்கவேண்டும்.

தனவேலு: சுகாதார அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் செந்தமிழில் நன்றாகத்தான் பேசுகிறார். அவர் இதற்கு எழுந்து பதில் சொல்லலாமே?

நாராயணசாமி: அமைச்சரவை என்பது கூட்டுபொறுப்பு உடையது. கேள்வி நேரத்தில் ஒரேயடியாக வாக்குறுதி தரமுடியாது. அருகிலேயே கரிக்கலாம்பாக்கத்தில் அனைத்து வசதியும் உள்ளது.

தனவேலு: நான் எனது தொகுதிக்குத்தான் கேட்கிறேன்.

நாராயணசாமி: நிதி நிலைமைக்கேற்ப இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கிராமப்புறங்களில் பணியாற்ற மறுக்கும் டாக்டர்கள்

அன்பழகன் (அ.தி.மு.க.): கிராமப்பகுதியில் டாக்டர்கள் பணி செய்ய முன்வருவதில்லை. நாம் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.50 கோடி செலவு செய்கிறோம். அவர்களை ஒரு வருடமாவது கிராமப்புறங்களில் பணி செய்ய சொல்லுங்கள்.

நாராயணசாமி: கிராமப்புறங்களில் அவர்கள் பணி செய்யவேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் அவர்கள் எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசினை பெற்று நகரப்பகுதிக்கு வந்துவிடுகின்றனர்.

சிவா (தி.மு.க.): இந்த ஆட்சியில் நாங்கள் யாரும் அப்படி கேட்டு பெறவில்லை.

நாராயணசாமி: கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில்தான் டாக்டர்கள், நர்சுகளுக்கு இதுபோன்று உத்தரவுகள் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்