250 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் உறுதி
புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் 250 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் கூறினார்.;
புதுச்சேரி,
மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பேசியதாவது:–
முன்மாதிரி திட்டம்புதுவை, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த மொத்தம் 21 ஆயிரத்து 950 மீனவ குடும்பத்தினருக்கு அவரவர் வங்கிக்கணக்கில் வருகிற 19–ந்தேதி நிவாரணமாக தலா ரூ.5,500 வீதம் ரூ.11 கோடியே 97 லட்சத்து 65 ஆயிரம் செலுத்தப்படும். இன்னும் 3 மாதங்களுக்குள் புதுவையில் மீன்வள மேம்பாட்டு கழகம் நிறுவப்படும்.
சுகாதாரத்துறையில் அவசர சிகிச்சை சேவை வழங்குவதற்கு ஒரு முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் பங்களிப்புடன் முதல்கட்டமாக அரசு பொதுமருத்துவமனையில் 15 படுக்கைகள், காரைக்கால் பொது மருத்துவமனையில் 8 படுக்கைகள், மாகி மற்றும் ஏனாம் மருத்துவமனைகளில் 6 படுக்கைகளை உள்ளடக்கி இச்சேவையை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடுதீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அருகில் உள்ள மேல்சிகிச்சை மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு தனியார் பங்களிப்புடன் 108 ஆம்புலன்சு சேவையை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு விரைவில் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் காரைக்கால் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டே அந்த கல்லூரிக்கு தேவையான மருந்துகளும், விரிவுரையாளர்களும் நியமிக்கப்படுவர். மேலும் அக்கல்லூரிக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஏற்படுத்துவதற்கு ரூ.30 கோடி ஒதுக்க உறுதியளித்துள்ளது. இப்பணிகளை 2018 மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
250 மாணவர்கள்புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் தற்போது எம்.பி.பி.எஸ். படிப்பில் தற்போது 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்படும். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி, செயலாளரை சந்தித்து பேசியுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.