பிரதமர், நிதி மந்திரிக்கு ‘சானிடரி நாப்கின்’கள் தேசியவாத காங். மகளிர் அணியினர் அனுப்பினர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர், நிதி மந்திரி ஆகியோருக்கு தேசியவாத மகளிர் அணியினர் ‘சானிடரி நாப்கின்’களை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-15 23:55 GMT

வசாய்,

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர், நிதி மந்திரி ஆகியோருக்கு தேசியவாத மகளிர் அணியினர் ‘சானிடரி நாப்கின்’களை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு

மத்திய அரசு ஜி.எஸ்.டி. எனப்படும் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவை வரியை நாடு முழுவதும் அடுத்த மாதம் (ஜூலை) 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இந்த வரியில் மாநிலங்களுக்கு ஏற்ப ‘சானிடரி நாப்கின்’களுக்கு 12–ல் இருந்து 14.5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தங்களது சுகாதார சம்மந்தப்பட்ட மற்றும் அத்தியாவசிய தேவையான ‘சானிடரி நாப்கின்’களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நூதன போராட்டம்

இந்தநிலையில், ‘சானிடரி நாப்கின்’களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து நேற்று வசாய்–விரார் தேசியவாத காங்கிரஸ் மகளிர் அணியினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோருக்கு ‘சானிடரி நாப்கின்’கள் அனுப்பி வைக்கும் நூதன போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் ‘சானிடரி நாப்கின்’கள் அடங்கிய 50–க்கும் மேற்பட்ட பார்சல்களை எடுத்து வந்து பிரதமர் அலுவலக முகவரி எழுதி வசாய் தபால் நிலையத்தில் தபால்காரரிடம் ஒப்படைத்தனர்.

பிரதமர் மற்றும் நிதி மந்திரிக்கு ‘சானிடரி நாப்கின்’கள் அனுப்பிய இந்த போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்