வறட்சி நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வறட்சி நிவாரணம் வழங்க கோரி விவசாய சங்கத்தினர் பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-06-15 23:48 GMT
பாகூர்,

அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலம் பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வறட்சி நிவாரணம் வழங்க கோரியும், வங்கிக் கடனை தள்ளுபடி செய்யாத மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பாகூர் மாரியம்மன் கோவில் அருகே ஒன்றுகூடி அங்கிருந்து தாசில்தார் அலுவலகத்துக்கு விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க நிர்வாகிகள் மாசிலாமணி ரவி, கீதநாதன், ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பெருமாள், ரவிச்சந்திரன், நாராயணன், கணேசன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா, கலியமூர்த்தி, முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

உருவ பொம்மை எரிப்பு

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, திடீரென்று பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எடுத்து வந்து ரோட்டில் போட்டு விவசாயிகள் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்ததும் அங்கு இருந்த போலீசார் உருவ பொம்மை மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுதொடர்பாக விவசாய சங்கத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்