விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து கணக்காளர் கைது

விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து கணக்காளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-06-15 23:28 GMT

சிக்கமகளூரு,

புதிதாக வீடு கட்டும் ஒரு விவசாயிக்கு வீட்டு வரைபடத்திற்கான அனுமதி வழங்க அவரிடமிருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து கணக்காளரை ஊழல் தடுப்பு படையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

வீட்டு வரைபடத்துக்கான அனுமதி...

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். விவசாயி. இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் வீட்டு வரைபடத்துக்கான அனுமதி கோரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எம்.சி.ஹள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிராம பஞ்சாயத்து கணக்காளர் சந்திரகாசை சந்தித்த, சாந்தகுமார் வீட்டு வரைபடத்துக்கான அனுமதி வழங்குவது பற்றி கேட்டு உள்ளார்.

அப்போது சந்திரகாஷ் வரைபடத்துக்கான அனுமதி வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு சாந்தகுமாரும் ஒப்புக்கொண்டு ரூ.2 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். இதையடுத்து வீட்டு வரைபடம் வேண்டும் என்று சந்திரகாசிடம், சாந்தகுமார் கேட்டதாக தெரிகிறது. ஆனால் மீதம் உள்ள ஆயிரம் ரூபாயை தந்தால்தான் அனுமதி வழங்குவேன் என்று சந்திரகாஷ் கூறியதாக தெரிகிறது.

கையும், களவுமாக பிடித்தனர்

இதனால் மனம் உடைந்த சாந்தகுமார், சந்திரகாஷ் மீது ஊழல் தடுப்பு படையில் புகார் கொடுத்தார். இதையடுத்து சாந்தகுமாருக்கு ஊழல் தடுப்பு படையினர் சில அறிவுரைகளை வழங்கினர். மேலும் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சந்திரகாசை சந்தித்த சாந்தகுமார் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை சந்திரகாஷ் வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் கையும், களவுமாக சந்திரகாசை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து கைதான சந்திரகாசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்