உரிய அனுமதியுடன் விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ளலாம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவிப்பு
திருப்பூர் மாவட்ட நீர் நிலைகளில் இருந்து உரிய அனுமதி பெற்று விவசாயிகள் இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகள், குளங்கள் மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற 144 நீர் நிலைகளில் இருந்து வண்டல்மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் மண் பாண்டம் செய்தல் போன்ற பயன்பாடுகளுக்கு பொதுமக்கள் எடுத்து சென்று பயன்படுத்தி கொள்ள தாசில்தார்களின் அனுமதி பெற்றுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் வண்டல் மண் உள்ள 125 நீர் நிலை புறம்போக்குகள் ஆய்வு செய்யப்பட்டு விவசாயிகள் அதனை பயன்படுத்திட ஏதுவாக தற்போது திருப்பூர் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
இலவசமாக மண் எடுக்கலாம்இதன்படி தாராபுரம் வட்டத்தில் 14 நீர் நிலைகளுக்கும், காங்கேயம் வட்டத்தில் 6 நீர் நிலைகளுக்கும், உடுமலை வட்டத்தில் 51 நீர் நிலைகளுக்கும், மடத்துக்குளம் வட்டத்தில் 6 நீர் நிலைகளுக்கும், அவினாசி வட்டத்தில் 8 நீர் நிலைகளுக்கும், ஊத்துக்குளி வட்டத்தில் 5 நீர் நிலைகளுக்கும், திருப்பூர் வடக்கு கிராமத்தில் 1 நீர் நிலைக்கும், திருப்பூர் தெற்கு வட்டத்தில் 25 நீர் நிலைகளுக்கும், பல்லடம் வட்டத்தில் 9 நீர் நிலைகளுக்கும் என மொத்தம் மாவட்டத்தில் 125 நீர் நிலைகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் வட்டத்தில் உள்ள தாசில்தார்களை அணுகி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை எடுத்து செல்ல அன்றைய தினமே அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.