குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டி,
சின்னாளபட்டி அருகே திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து நகர் உள்ளது. இங்கு சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அங்கு டிராக்டர், லாரிகளில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரி பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
ஒன்றிய அலுவலகம் முற்றுகைஇதைத்தொடர்ந்து நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலிங்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். ஆனால் ஊராட்சி அலுவலகம் பூட்டி கிடந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் ஜெயசந்திரன் பொதுமக்களை அலுவலகத்துக்குள் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.