மாணவனை வராண்டாவில் அமர வைத்த ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவனை வராண்டாவில் அமர வைத்த ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-06-16 00:00 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த அகரமேல் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை இயங்கும் இந்த பள்ளியில் அகரமேல், மேப்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 1–ம் வகுப்பு படிக்கும் அன்பு என்ற மாணவனை பள்ளி ஆசிரியை வகுப்பறைக்குள் சேர்க்காமல் பள்ளி வராண்டாவில் தனியாக அமர வைத்திருந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர் அந்த பள்ளியின் முன்பு ஒன்று திரண்டு முற்றுகையிட்டு இது குறித்து அந்த வகுப்பு ஆசிரியையிடம் கேட்டனர். அதற்கு ஆசிரியை, அந்த மாணவன் வகுப்பறைக்குள் அமரவில்லை. அதனால் வராண்டாவில் அமர வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து பள்ளியின் முன்பு பெற்றோர்கள் ஒன்று திரண்டு பள்ளி ஆசிரியையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நசரத்பேட்டை போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆசிரியைகளை மாற்ற வேண்டும்

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கூறுகையில்:–

இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளுக்குள் ஏற்படும் தகராறு காரணமாக எங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி இங்குள்ள 2 ஆசிரியைகள் மாணவர்களை அடிப்பது, வெளியே அமர வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பெல்லாம் பள்ளி நேரத்தில் மாணவர்கள் எல்லாம் வெளியே சுற்றிக்கொண்டு இருப்பார்கள். தற்போது புதிதாக வந்த தலைமை ஆசிரியை, உரிய நேரத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பதால் மாணவர்கள் இப்போது நன்றாக படிக்கின்றனர். இந்த கெடுபிடி சில ஆசிரியைகளுக்கு பிடிக்காமல் போனதால் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அரசு பள்ளியில் படிக்க வைக்கிறோம்

தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களின் குழந்தைகளை அந்த ஆசிரியை தனியாக அழைத்து வந்து தலைமை ஆசிரியை அறையில் விட்டுள்ளார். அதிக பணம் கொடுத்து குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை என்ற காரணத்தால்தான் அரசு பள்ளியில் படிக்க வைக்கிறோம்.

ஆனால் ஆசிரியைகளுக்குள் உள்ள மோதலில் எங்கள் குழந்தைகளை தண்டிப்பது ஏன்? இந்த பள்ளியில் உள்ள 2 ஆசிரியைகளை மாற்ற வேண்டும் அதுவரை எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்து விட்டு தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்