ஓரகடம் அருகே பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

ஓரகடம் அருகே பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

Update: 2017-06-15 22:45 GMT

வாலாஜாபாத்,

ஓரகடம் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாஸ். இவருடைய மனைவி மரியம்பீவி (வயது 60). உடல் நலம் இன்றி அவர் இறந்து விட்டார். வாரணவாசி ஊராட்சிக்குட்பட்ட ஆம்பாக்கம் கிராமத்தில் முஸ்லிம் மதத்தினருக்கென தனியாக அரசு மயானம் உள்ளது. அங்கு மரியம்பீவியின் இறுதிச்சடங்கை நடத்த அவரின் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

ஆனால் ஆம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டு வந்து தங்கள் பகுதியில் அரசு ஒதுக்கி உள்ள மயானத்தை பயன்படுத்தவும், அதில் உடலை புதைக்கவும், எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மயானத்தில் புதைக்க பள்ளம் தோண்ட வந்த ஜே.சி.பி. எந்திரத்தையும் சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் தாசில்தார் சுமதி, ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், ஓரகடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோகன் மற்றும் போலீசார் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து முஸ்லிம் மதத்தினருக்கென வேறு இடத்தில் மயானம் அமைக்க உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் ஏற்கனவே அரசு ஒதுக்கிய மயானத்தில் மரியம் பீவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்