ஆவடியில் தனியார் கல்லூரி பஸ் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுமி பலி
ஆவடியில் தனியார் கல்லூரி பஸ் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தாள்.
ஆவடி,
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 3 வயதில் வினிஷா என்ற மகள் இருந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்கொடி தனது மகளுடன் ஆவடி நந்தவன மேட்டூர் வ.உ.சி. தெருவில் வசிக்கும் தனது தாயார் ராணி வீட்டுக்கு வந்தார். தனது மகளை தாய் வீட்டிலேயே விட்டுச்சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வினிஷா, தனது மாமா சின்னசாமி உடன் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றாள். ஆவடி–பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆவடி பழைய நகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் அமர்ந்து இருந்த சிறுமி வினிஷா, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
தலை நசுங்கி சாவுஅப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஆவடி வேல்டெக் கல்லூரி பஸ், சிறுமி மீது ஏறி இறங்கியது. இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய சிறுமி வினிஷா, தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தாள்.
இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ் டிரைவரான செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் எல்லையம்மன் நகரைச் சேர்ந்த கமல்பாஷா (வயது 58) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.