குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-15 00:09 GMT

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் வழங்கவில்லை

தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார்நகர், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து ஊராட்சி செயலாளர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், ‘‘வட்டார வளர்ச்சி அலுவலர் தற்போது அலுவலகத்தில் இல்லை. அலுவலக பணி காரணமாக வெளியே சென்றுள்ளார். அவர் வந்ததும் உங்களது கோரிக்கை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்ததும் மனு கொடுத்துவிட்டு செல்கிறோம் என காத்திருந்தனர். ஆனால் சுமார் 1½ மணி நேரமாகியும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தில் இருந்த அதிகாரி ஆனந்தனிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்