மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் செத்தன
இரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுந்த 2 பெண் காட்டுயானைகள் மின்சாரம் தாக்கி செத்தன.
குடகு,
குடகு மாவட்டம் அம்மத்தி அருகே இரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுந்த 2 பெண் காட்டுயானைகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக செத்தன.
2 காட்டுயானைகள்குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா அம்மத்தி அருகே அமைந்துள்ளது அன்னங்காளா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் இரை மற்றும் தண்ணீரைத் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்ட்காசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலையில் இரை தேடி வனப்பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறின. அவைகள் அன்னங்காளா கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள ஒரு காபித் தோட்டத்தில் இருந்து காபிச் செடிகளையும், பாக்கு மரங்களையும் பிடுங்கியும், ஒடித்தும் தின்று கொண்டிருந்தன.
செத்துவிட்டனஅப்போது எதிர்பாராத விதமாக ஒரு பாக்கு மரம் சரிந்து அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதில் அந்த மின்கம்பி அறுந்து மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்த 2 காட்டுயானைகள் மீது விழுந்தது. இதில் 2 காட்டுயானைகளையும் மின்சாரம் தாக்கியது.
இதில் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த ஒரு காட்டுயானை சம்பவ இடத்திலேயே செத்துவிட்டது. இன்னொரு காட்டுயானை படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்து எழுந்து சிறிது தூரம் நடந்து சென்றது. பின்னர் சிறிது தூரத்தில் அதுவும் கீழே சுருண்டு விழுந்து செத்துவிட்டது.
குழிதோண்டி புதைப்பு2 காட்டுயானைகளும் மின்சாரம் தாக்கி செத்ததைப் பார்த்த அப்பகுதி கிராம மக்கள் உடனே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்துறைக்கு தகவல் தெரிவித்து மின் வினியோகத்தை நிறுத்தினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் செத்துக்கிடந்த 2 காட்டுயானைகளின் உடல்களை கைப்பற்றினர். அதையடுத்து கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கால்நடை டாக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதன்பிறகு 2 யானைகளின் உடல்களும் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டன.
வருத்தம் அளிக்கிறதுஇந்த சம்பவம் குறித்து குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அபேத்மங்களா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேற்றில் சிக்கி பரிதவித்த ஒரு யானை பரிதாபமாக செத்தது. அதன்பிறகு கடந்த 5 நாட்களுக்கு முன்பு விராஜ்பேட்டை தாலுகா பாலலே பகுதியில் உடலில் காயம் அடைந்திருந்த ஒரு காட்டுயானை சிகிச்சை பலனின்றி செத்தது. தற்போது இங்கு 2 காட்டுயானைகள் மின்சாரம் தாக்கி செத்துள்ளன.
இந்த 2 காட்டுயானைகளும் பெண் யானைகளாகும். ஒரு யானைக்கு 23 வயதும், ஒரு யானைக்கு 19 வயதும் ஆகிறது. இரையைத் தேடி வந்த அந்த யானைகளுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் 4 காட்டுயானைகள் செத்துள்ளது வருத்தம் அளிக்கிறது.
தீவிர நடவடிக்கைஇனிமேல் காட்டுயானைகள் சாவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும், அவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.