படிக்காமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் எலி மருந்து தின்ற வாலிபர் சாவு

படிக்காமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் வாலிபர் எலி மருந்தை தின்று சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

Update: 2017-06-14 22:15 GMT
புதுவை,

அரியாங்குப்பம் காமராஜர் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிராஜ். வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரிதேவி. இவர்களுடைய மகன்கள் காளிதாஸ், புருஷோத் (வயது 18).
2-வது மகன் புருஷோத், கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்தபோது, ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி அடைந்ததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதையடுத்து வேறு எதுவும் படிக்காமலும், வேலைக்கு செல்லாமலும் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரை தாயார் அடிக்கடி கண்டித்தார்.

தற்கொலை முயற்சி

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புருஷோத்தை அவருடன் படித்த மாணவர்கள் சந்தித்து விட்டு சென்றனர். இதை பார்த்த கஸ்தூரிதேவி, ‘நீயும் ஒழுங்காக படித்து இருந்தால் தற்போது பிளஸ்-2 முடித்திருக்கலாம்’ என்று கூறி, கண்டித்தார். இதனால் மனமுடைந்த புருஷோத், வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று அவர் வீடு திரும்பினார். ஆனாலும் புருஷோத்துக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருந்து வந்தது.

இதையடுத்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் புருஷோத் பரிதாபமாக இறந்துபோனார்.
இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயாரும் விஷம் குடித்தார்

மகன் புருஷோத்தை கண்டித்ததால் அவர் எலி மருந்து தின்றதை அறிந்த கஸ்தூரிதேவி அதிர்ச்சி அடைந்தார். தன்னால் தானே மகன் எலி மருந்து தின்று விட்டான் என்று விரக்தி அடைந்தார். இதனால் அவரும் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த கஸ்தூரி தேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடல் நலம் தேறினார்.

அவரும், அவரது மகன் புருஷோத்தும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் தான் புருஷோத் மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டு இறந்துபோன பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்