மதுக்கடையை மூடக்கோரி மாணவ- மாணவிகள் தர்ணா போராட்டம்

தர்மபுரி அருகே சவுளூரில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி அந்த மதுக்கடை முன்பு மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Update: 2017-06-14 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி - பாலக்கோடு சாலையில் உள்ள சவுளூர் மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த பகுதியில் கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த வழியாக மாணவ-மாணவிகள், பெண்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நேற்று மதியம் அந்த மதுக்கடை முன்பு திரண்டனர். மேலும் பெண்கள், தொழிலாளர்களும் அங்கு வந்தனர். பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் இந்த மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று அந்த பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ-மாணவிகள் மதுக்கடையை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், தாசில்தார் ஜெயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த மதுக்கடையை ஒரு மாதத்திற்குள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்