பெங்களூருவுக்கு ஏன் கொண்டு செல்லவேண்டும்? கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை இங்கேயே ஆய்வு செய்யலாமே?

பெங்களூருவுக்கு ஏன் கொண்டு செல்லவேண்டும்? கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை இங்கேயே ஆய்வு செய்யலாமே? தொல்லியல் துறையினரிடம் ஐகோர்ட்டு கேள்வி

Update: 2017-06-14 23:00 GMT

மதுரை,

அகழாய்வில் கிடைத்த பொருட்களை பெங்களூருவுக்கு ஏன் கொண்டு செல்லவேண்டும்? கீழடியில் வைத்தே ஆய்வு செய்யலாமே என்று தொல்லியல் துறையினரிடம் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஐகோர்ட்டில் வழக்கு

சென்னையைச் சேர்ந்தவர் கனிமொழி மதி, வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை பெங்களூருவுக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்த மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

அருங்காட்சியகம்

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் ஆஜராகி, “சென்னை ஐகோர்ட்டு விசாரித்த வழக்கு ஒன்றில் ஒருவருக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது. அந்த தொகையை கீழடி அகழாய்வு பணிகளுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை பயன்படுத்தி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும்“ என்றார்.

அப்போது கீழடியில் அடுத்தக்கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, “அங்கு 3–ம் கட்டப்பணிகள் தொடங்கிவிட்டன“ என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், ஏற்கனவே அகழாய்வு பணிகளை மேற்கொண்ட தொல்லியல் அதிகாரியை இடமாற்றம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் கேள்வி

அதற்கு தொல்லியல்துறை தரப்பு வக்கீல், இது நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொல்லியல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். கீழடியில் பணியாற்றிய அதிகாரியை போல நாடு முழுவதும் 20–க்கும் மேற்பட்ட தொல்லியல் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்“ என்றார்.

மேலும், அகழாய்வுப் பொருள்களை ஆய்வுக்காக பெங்களூரு எடுத்துச்செல்ல வேண்டும் என்று தொல்லியல்துறை தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “இங்கேயே (கீழடி) அந்த ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாமே? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் “அகழாய்வு பணியில் ஈடுபட்ட அதிகாரியை மாற்றியது தொடர்பான கோரிக்கைக்காக மனுதாரர் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யலாம்“ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்