கரூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

கரூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-14 22:45 GMT

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். மேலும் கொளந்தானூரில் உள்ள கால்நடைபராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று காலை சிறிது நேரம் கூடி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மருத்துவர் கன்னியப்பன் கூறியதாவது:–

கால்நடை பராமரிப்பு துறையில் உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வழங்கும் முறையில் கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

ஒரு நாள் விடுப்பு

இந்த அரசாணையின் படி துறையில் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டன. பணியிடமும் மாற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் புதிதாக அரசாணையை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு துறை அதிகாரிகளுக்கு அரசின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற்று, புதிய அரசாணையை செயல்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடை மருத்துவர்கள் போராட்டத்தினால் கரூர் மாவட்டத்தில் கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டுவந்தவர்கள் அவதி அடைந்தனர். கால்நடைகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் அவற்றை திரும்ப அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்