கோரிக்கைகளை வலியுறுத்தி கால்நடை மருத்துவ அதிகாரிகள், உதவி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கால்நடை மருத்துவ அதிகாரிகள் மற்றும் உதவி மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.;
திருச்சி,
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை திருச்சி மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம், மற்றும் உதவி மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று ஒரு நாள் தற்காலிக விடுப்பு எடுத்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.ஊதிய உயர்வில் பிரச்சினை
25 முதல் 28 ஆண்டுகளாக பதவி உயர்வே இல்லாமல் பணியாற்றி வந்த கால்நடை உதவி மருத்துவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதி பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்கள் வழங்கி உத்தரவிடப்பட்டது. துணை இயக்குனர்கள், முதன்மை கால் நடை மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு ஊதிய உயர்வு செய்யப்படாததால் ஏப்ரல், மே மாத ஊதியம் பெறுவதில் நீடித்து வரும் நிலையை களைய கோரி நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்துக்கு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் கணபதி பிரசாத் தலைமை தாங்கினார்.
கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் சுகுமார், மருத்துவ உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் உள்பட சங்க நிர்வாகிகள் மற்றும் கால்நடை மருத்துவ அதிகாரிகள், உதவி மருத்துவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.