மணல் ஏற்றியதை தடுத்த போது பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் 9 லாரிகள் பறிமுதல்
தொட்டியம் அருகே திருட்டு மணல் ஏற்றியதை தடுத்த போது பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித்தலைவரை போலீசார் கைது செய்தனர். பொக்லைன் எந்திரம், 9 மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள எம்.புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கீழக்காரைக்காடு பகுதி காவிரியாற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் காவிரிக்கரையை சேதப்படுத்தி திருட்டுத்தனமாக மணல் லாரிகளில் எடுத்து செல்வதாக நேற்று அதிகாலை 4 மணிக்கு முசிறி ஆற்று பாதுகாப்பு பிரிவு பாசன ஆய்வாளர் சுமதிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உதவியாளர் மனோகரன், பிரபு ஆகியோருடன் அங்கு சென்ற அவர் எம்.புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தராஜூக்கு சொந்தமான இடத்தில் மணல் கொட்டப்பட்டு லாரிகளில் ஏற்றிக்கொண்டிருந்ததை பார்த்து தடுக்க முயன்றார்.
கொலை மிரட்டல்
அப்போது மணல் லாரி டிரைவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையறிந்து அங்கு வந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தராஜ் பாசன ஆய்வாளர் சுமதியை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாசன ஆய்வாளர் சுமதி காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், காட்டுப்புத்தூர் சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து எம்.புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தராஜை கைது செய்தனர்.
மேலும் திருட்டுத்தனமாக மணல் ஏற்ற பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம், மணல் ஏற்றிய 9 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.