கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

Update: 2017-06-14 21:45 GMT

உத்தமபாளையம்,

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோந்து பணி

கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்–இன்ஸ்பெக்டர் அமராவதி மற்றும் போலீசார் கம்பம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீதியில் சந்தேகப்படும்படி ஒரு ஆட்டோ நிற்பதை பார்த்தனர்.

இதையடுத்து அந்த ஆட்டோவை சோதனையிடுவதற்காக போலீசார் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பியோடினர். ஆனாலும் அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மகன் சின்னு (வயது 28) என்பதும், கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆட்டோ மற்றும் அதில் இருந்த 700 கிலோ ரே‌ஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடியவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1,000 கிலோ அரிசி

இதே போல் கம்பத்தை அடுத்த காமயகவுண்டன்பட்டி பகுதியில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகப்படும்படி காரில் சிலர் அமர்ந்திருப்பதை பார்த்தனர். உடனே அவர்களிடம் விசாரிப்பதற்காக சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர் காரில் போலீசார் சோதனையிட்ட போது அதில் 1,000 கிலோ ரே‌ஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அரிசியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் தப்பியோடியது அதே பகுதியை சேர்ந்த ஆசை, மணிகண்டன் உள்பட 4 பேர் என்பதும், கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்