மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி சாவு: உறவினர்கள் சாலை மறியல்
மினிலாரி மோதிய விபத்தில் விவசாயி சாவு: திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தியதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதியதில் விவசாயி இறந்தார். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விபத்தில் விவசாயி பலிகள்ளக்குறிச்சி அருகே உள்ள ஈயனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டியப்பன்(வயது 60), இவரது மகன் வெங்கடேசன், உறவினர் ஜெயராமன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் எஸ்.ஒகையூர் மேட்டுக்காலனி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினிலாரி வெங்கடேசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஆண்டியப்பன் உள்ளிட்ட 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு ஆண்டியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்இதனிடையே இந்த விபத்ததானது திட்டமிட்டு நடத்துப்பட்டு இருப்பது போன்று இருப்பதாகவும், இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆண்டியப்பனின் உறவினர்கள் ஈயனூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி, இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஈயனூர் கிராம நிர்வாக அலுவலர் மனோஜ், கொடுத்த புகாரின் பேரில் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.