பதவி உயர்வு வழங்கக்கோரி கால்நடை மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
பதவி உயர்வு வழங்கக்கோரி கால்நடை மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
விழுப்புரம்,
பதவி உயர்வு வழங்கக்கோரி கால்நடை மருத்துவர்கள் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தற்செயல் விடுப்பு போராட்டம்கால்நடை பராமரிப்புத்துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாமல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையை களைந்து உடனடியாக பதவி உயர்வு வழங்கக்கோரியும், பெரும்பாலானோர் கால்நடை உதவி மருத்துவர்களாகவே பணி ஓய்வு பெறும் நிலையை அகற்றவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று கால்நடை மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் கால்நடை மருத்துவர்கள் 113 பேர் நேற்று பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்– பேரணிதமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகியவை சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். உதவி மருத்துவர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி, மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜாசிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட இணை செயலாளர் செல்வம், கோட்ட செயலாளர்கள் மணிமாறன், நரேந்திரன், யுவராஜ், கோபி, மகளிர் பிரிவு செயலாளர் சகுந்தலா உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை சென்றடைந்தனர். அதன் பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து, கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
கால்நடை டாக்டர்களின் இந்த போராட்டம் காரணமாக கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது. அதுபோல் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண வைக்கோல் வழங்கும் பணிகள், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் பணிகள், தீவனப்பயிர் வளர்ப்பு பணிகள், கால்நடை பாதுகாப்பு முகாம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது.