லாட்ஜில் கல்லூரி மாணவி கொலை கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

திருநாகேஸ்வரத்தில் லாட்ஜில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.;

Update: 2017-06-14 22:30 GMT

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ஒரு லாட்ஜ் (தங்கும்விடுதி) உள்ளது. இந்த லாட்ஜில் வலங்கைமான் அவளிவநல்லூர் அண்ணாநகரை சேர்ந்த வீரையன் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (வயது28) என்பவர் திருப்புறம்பியத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகாவுடன்(19) அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் மாலை லாட்ஜ் அறையில் கீர்த்திகா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை அழைத்து வந்த சுபாஷ்சந்திரபோஸ் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுபாஷ்சந்திரபோஸ் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவர் அவளிவநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு 2½ வயதில் ஆண்குழந்தை உள்ளதும் குடும்ப பிரச்சினை காரணமாக சுபாஷ்சந்திரபோசை மனைவி பிரிந்து சென்று விட்டதும் தெரியவந்தது. மேலும் கடந்த 3 வருடங்களாக தனது குடும்பத்தை விட்டும் சுபாஷ்சந்திரபோஸ் பிரிந்து இருந்ததும் தெரிய வந்தது. ஆசிரியர் கல்வி பயின்றுள்ள சுபாஷ்சந்திரபோஸ் திருப்புறம்பியத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அங்கு கீர்த்திகாவை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

முகவரி மாற்றம்

இதனால் சுபாஷ்சந்திரபோஸ் தனது உறவினர்கள் மூலம் கீர்த்திகாவின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து கீர்த்திகாவுக்கும் சுபாஷ்சந்திரபோசுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தற்போது கீர்த்திகா கொலை செய்யப்பட்ட அதே லாட்ஜில் கடந்த மாதம் 18–ந் தேதி கீர்த்திகாவும் சுபாஷ்சந்திரபோசும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது சரியான முகவரியை கொடுத்த சுபாஷ்சந்திரபோஸ் 2–வது முறையாக கடந்த 12–ந் தேதி அறை எடுத்த போது தனது முகவரியை அம்மாப்பேட்டை, தஞ்சாவூர் என மாற்றி கொடுத்துள்ளார்.

தனிப்படைகள்

திருநாகேஸ்வரத்தில் உள்ள லாட்ஜூக்கு கீர்த்திகா வந்த போது பட்டுப்புடவையை அணிந்து வந்துள்ளார். ஆனால் நைட்டியில் இறந்து கிடந்த அவரின் முகம் மிகவும் சிதைந்து காணப்பட்டது. கொலை நடந்த விதத்தை பார்க்கும் போது சுபாஷ்சந்திரபோசுடன் இந்த கொலைக்கு வேறு யாரும் உடந்தையாக செயல்பட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் கைது செய்யப்பட்டால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்