பழங்குடி இன பட்டியலில் சேர்க்கக்கோரி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள்

பழங்குடி இன பட்டியலில் சேர்க்கக்கோரி உடுமலையில் மழைவாழ் மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர்.

Update: 2017-06-14 22:15 GMT

உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள மேற்குதொடர்ச்சி மலையில் பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருமூர்த்திமலை உள்ளிட்ட செட்டில்மெண்ட் பகுதிகளில் வாழும் மலைபுலையன் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஆய்வாளரை நியமித்தது.

மலைபுலையன் இனமக்கள் பழங்குடியினர்தான் என்று தமிழக அரசுக்கு ஆய்வாளர் அறிக்கை கொடுத்து 4 ஆண்டுகள் ஆவதாகவும், ஆனால் அந்த அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பாமல் உள்ளது எனவும், எனவே அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டமும் நேற்று உடுமலை குட்டைத்திடலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் குட்டை திடலில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

காத்திருக்கும் போராட்டம்

இதைத்தொடர்ந்து குட்டைத்திடலுக்கு அருகில் கச்சேரி வீதியில் உள்ள நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் காத்திருக்கும் போராட்டம் நேற்று தொடங்கினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச்செயலாளர் ஜி.செல்வம், திருப்பூர் மாவட்ட தலைவர் என்.மணி, பொருளாளர் கே.குப்புசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏ.ராஜகோபால் உள்பட பலர் பேசினர்.

காத்திருக்கும் போராட்டத்தில் திருமூர்த்திமலை, குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு, ஈசல்திட்டு, ஆட்டுமலை, மேல்குருமலை ஆகிய செட்டில்மெண்ட் பகுதிகளை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து பாரம்பரிய நடனம் ஆடி போராட்டத்தை தொடங்கினர். நேற்று இரவு 7 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் குட்டை திடலிலும், பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கும் சென்றனர்.

மேலும் செய்திகள்