வெள்ளலூரில் ரூ.11½ கோடி செலவில் குப்பைகளை தரம்பிரிக்கும் 2–வது நிலையம்

வெள்ளலூரில் ரூ.11½ கோடி செலவில் குப்பைகளை தரம்பிரிக்கும் 2–வது நிலையம் ‘சீர்மிகு நகர்’ திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

Update: 2017-06-14 22:00 GMT

கோவை

கோவை வெள்ளலூரில் ரூ.11½ கோடி செலவில் குப்பைகளை தரம்பிரிக்கும் 2–வது நிலையத்தை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சீர்மிகு நகர் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமும் 1,000 டன் குப்பைகள்

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தினமும் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு அள்ளுவதாக கூறப்பட்டாலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமை அடையாமலும், சரியாக செயல்படுத்தப்படாமலும் உள்ளது. நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் 750 ஏக்கர் பரப்பளவில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

வெள்ளலூர் குப்பை கிடங்கினால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், ஈக்கள், கொசு பரவுவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி வெள்ளலூர் மற்றும் கோணவாய்க்கால் பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளலூர் குப்பை கிடங்கு தொடர்பாக சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் மனுதாக்கல் செய்து அந்த மனு விசாரணையில் உள்ளது.

2–வது தரம்பிரிக்கும் நிலையம்

இந்தநிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேரும் கூடுதல் குப்பைகளை தரம்பிரித்து கையாள 2–வது நிலையத்தை விரைவில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

கோவை நகரில் தினமும் சேரும் 1000 டன் குப்பையில், 500 டன் குப்பை ஏற்கனவே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 100 டன் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. மீதம் உள்ள 400 டன் குப்பையை கையாள 2–வது கட்ட குப்பை தரம்பிரிப்பு நிலையத்தை ரூ.11½ கோடி செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் நிதி உதவியை சீர்மிகு நகர் திட்டத்தில்(ஸ்மார்ட் சிட்டி) வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவியை கொண்டு, சுற்றுச்சுவர், அலுவலக கட்டிடம், மின்சார வசதி, எலெக்ட்ரானிக் எடை அளவு கண்காணிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஒப்பந்தம் விரைவில் கோரப்படும்.

பயோ கியாஸ் தயாரிப்பு

புதிதாக அமைக்கப்படும் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தில், பயோ கியாஸ் தயாரிக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாட்டில்கள் தயாரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை நகரம் விரிவடைந்து வருவதாலும், நகரில் நாளுக்குநாள் குப்பைகள் அதிக அளவில் சேர்ந்து வருவதாலும், 2–வது கட்ட குப்பை தரம்பிரிப்பு திட்டம் அவசியம் ஆகும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்