ஊட்டி நகராட்சி குப்பை கிடங்கில் ஈக்கள் உற்பத்தியாவதை தடுக்க மருந்து தெளிக்கும் பணி

ஊட்டி நகராட்சி குப்பை கிடங்கில், ஈக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது.

Update: 2017-06-14 21:30 GMT

ஊட்டி,

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா தலமான ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். நகராட்சியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மார்க்கெட் மற்றும் வீடுகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை நகராட்சி சுகாதார பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். பின்னர் அந்த குப்பைகள் யாவும் நகராட்சி வாகனங்கள் மூலம் ஊட்டி அருகே உள்ள தீட்டுக்கல் பகுதிக்கு கொண்டு சென்று, அங்குள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. மேலும் நாய், கால்நடைகள் உள்ளிட்டவைகள் இறந்தால் பூமிக்கடியில் புதைக்காமல், குப்பை கிடங்கில் வீசி வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஈக்கள், கொசு, கிருமிகள் உற்பத்தி ஆகாமல் இருக்க நகராட்சி சுகாதாரம் மூலம் குப்பை கிடங்கில் மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் மகாராஜா கூறியதாவது:–

மருந்து தெளிக்கும் பணி

ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) பிரபாகர் உத்தரவின்படி, தற்போது ஊட்டி நகராட்சியில் தொடர் மழை பெய்து வருவதால் தீட்டுக்கல்லில் உள்ள குப்பை கிடங்கில் ஈக்கள், கொசு, பூச்சிகள் உற்பத்தியாகாமல் இருக்க பூச்சி மருந்து தெளிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈக்கள் உற்பத்தியாகாமல் இருக்க லெமன்கிராஸ் ஆயில் என்ற மருந்து தெளிக்கப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க போகன் என்று மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் கிருமி நாசினிகள் குப்பை கிடங்கில் தெளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஊட்டி நகரில் குப்பைகள் அதிகமாக சேரும் பகுதிகளில் கிருமி நாசினிகள், கொசு மருந்து தெளிக்கப்பட உள்ளது. இதனால் ஊட்டி நகரில் மழைக்காலங்களில் நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்