மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 210 பேர் கைது

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 210 பேரை கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-06-14 22:30 GMT

ஊட்டி,

தமிழக சட்ட சபையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் வாங்கியது தொடர்பாக, பேச முயன்றதால் தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டார். இதை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் அருகே மறியலில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், கைதான மு.க.ஸ்டாலின் மற்றும் பிற எம்.எல்.ஏ.க்களை விடுதலை செய்யக்கோரியும் நீலகிரி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி–குன்னூர்

ஊட்டி மார்க்கெட் ரவுண்டானா பகுதியில் நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரவிக்குமார் தலைமையில் கட்சி அலுவலத்தில் இருந்து ஊட்டி ரவுண்டானா பகுதிக்கு தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் 5 பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் குன்னூர் நகர தி.மு.க.சார்பில், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் அங்குள்ள வி.பி.தெருவில் தி.மு.க.வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் ராமசாமி உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்–பந்தலூர்

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், நிர்வாகிகள் ரசாக், ஜெயக்குமார், ஞானசேகர், வெண்ணிலா, பாபு உள்பட ஏராளமான தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 27 தி.மு.க.வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் பந்தலூர் பஜாரில் நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 28 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 16 பெண்கள் உள்பட 210 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்