பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடைய வேண்டும் வேளாண் அதிகாரி வேண்டுகோள்

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையுமாறு, வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-06-14 19:30 GMT
நெல்லை,

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையுமாறு, வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதிய பயிர் காப்பீட்டு திட்டம்


நெல்லை மாவட்டத்தில் 2015–16ம் நிதியாண்டில் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் குருவிகுளம் வட்டாரம் கரிசல்குளம் குறுவட்டத்தில் பயிர் காப்பீடு செய்திருந்த 277 விவசாயிகளுக்கு, அதற்குரிய காப்பீட்டு தொகை வேளாண் காப்பீடு நிறுவனத்தால் கணக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அந்த தொகை, நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016–17ம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் 52,915 விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு பயிர்களுக்கு சுமார் ரூ.3.07 கோடி பிரீமியம் தொகை செலுத்தியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஐசிஐசிஐ பொது காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீட்டு தொகை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம்

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு மகசூல் அடிப்படையில் இழப்பீடு கணக்கிட்டு நிதிஉதவி வழங்கப்படும். காப்பீடு செய்யப்படும் பயிர்களை, சாகுபடி செய்யும் குத்தகைதாரர் உள்பட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.

முன்குறுவை பருவ நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த அடுத்த மாதம் (ஜூலை) 31–ந் தேதி கடைசி தேதியாகும். இதர பயிர்களான மக்காச்சோளம், சோளம், கம்பு, துவரை, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை மற்றும் பருத்திக்கு பிரீமியம் செலுத்த ஆகஸ்ட் மாதம் 15–ந் தேதி கடைசி நாளாகும்.

பிரீமிய தொகை ஏக்கருக்கு முன்குறுவை நெல்– ரூ.470, மக்காச்சோளம்– ரூ.272, சோளம்– ரூ.183, கம்பு– ரூ.151, உளுந்து– ரூ.260, பாசிப்பயறு– ரூ.260, நிலக்கடலை– ரூ.320, துவரை– ரூ.260, பருத்தி– ரூ.555 மட்டும் செலுத்தினால் போதும். எனவே விவசாயிகள் முன்குறுவை பருவ பயிர்களுக்கு காப்பீட்டு கட்டணத்தை உரிய காலக்கெடுவுக்குள் செலுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்