பழையகாயல் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு மகள் கண் எதிரே பரிதாபம்

பழையகாயல் அருகே மகள் கண் எதிரே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-06-14 20:00 GMT
ஆறுமுகநேரி,

பழையகாயல் அருகே மகள் கண் எதிரே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனியார் பஸ் டிரைவர்

விருதுநகர் அனுமன் நகரைச் சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ் சேவியர் (வயது 47). தனியார் பஸ் டிரைவர். இவருடைய மனைவி அந்தோணி அருள் பிரியா. இவர்களுக்கு மரிய அந்தோணி ரீட்டா (19) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். மரிய அந்தோணி ரீட்டா பிளஸ்–2 படித்து உள்ளார். அவர் கோடை விடுமுறையை முன்னிட்டு, ஆத்தூர் அருகே பழையகாயலில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வந்தார்.

படிக்கட்டு அருகில்...

நேற்று முன்தினம் மரிய பிரான்சிஸ் சேவியர் தன்னுடைய மகளை அழைத்து செல்வதற்காக பழையகாயலுக்கு வந்தார். பின்னர் மாலையில் மரிய பிரான்சிஸ் சேவியர், மகளுடன் விருதுநகருக்கு புறப்பட்டார். அவர்கள் 2 பேரும் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்சின் முன்பக்க படிக்கட்டு அருகில் மரிய பிரான்சிஸ் சேவியர் நின்று கொண்டிருந்தார். அவரது அருகில் மரிய அந்தோணி ரீட்டா நின்று கொண்டிருந்தார்.

பஸ்சிலிருந்து தவறி விழுந்தார்

பழையகாயலை அடுத்த ராமச்சந்திரபுரம் பகுதியில் பஸ் சென்றபோது, டிக்கெட் எடுப்பதற்காக, அவர் பையில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். அப்போது அவரது கண் கண்ணாடி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக அவர் கீழே குனிந்தபோது, குண்டும் குழியுமாக இருந்த சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் குலுங்கியது. இதனால் நிலைதடுமாறிய அவர் பஸ்சில் இருந்து தவறி ரோட்டில் விழுந்தார்.

ஆஸ்பத்திரியில் சாவு

உடனடியாக பஸ்சை நிறுத்தி, பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் மரிய பிரான்சிஸ் சேவியர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை பார்த்து மகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மகள் கண் எதிரே ஓடும் பஸ்சில் இருந்து தந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்